மடிகேரியில் மறைந்த ராணுவ வீரர் சிலை தடுப்பு சுவர் சேதம்
மடிகேரியில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் மோதி மறைந்த ராணுவ வீரர் தேவய்யாவின் சிலையின் தடுப்பு சுவர் சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் அரசு பஸ் டிரைவரை கைது செய்தனர்.
குடகு
பஸ் மோதி சிலை சேதம்
குடகு மாவட்டம் மடிகேரி சர்க்கிள் பகுதியில் ஜெனரல் திம்மையாவின் சிலை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஒன்று இந்த சிலை மீது மோதியது. இதையடுத்து சிலை சேதம் அடைந்தது. இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த
நிலையில் நேற்று முன்தினம் மடிகேரி தனியார் பஸ் நிலையம் அருகே உள்ள மறைந்த ராணுவ வீரர் தேவய்யாவின் சிலை தடுப்பு சுவர் மீது கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ் ஒன்று மோதியது. இதில் அந்த சிலையின் தடுப்பு சுவர்சேதம் அடைந்தது.
சிலை சேதம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கு கொடவா சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொடர் சம்பவங்களை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
டிரைவர் கைது
இதை அறிந்த மந்தர் கவுடா எம்.எல்.ஏ., மடிகேரி போலீசார் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலை தடுப்பு சுவரை சேதப்படுத்திய அரசு பஸ் டிரைவரை கைது செய்யவேண்டும் என்றும், சிலை தடுப்பு சுவரை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட போலீசார், மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. மேலாளர், சிலை தடுப்பு சுவரை சீரமைத்து கொடுப்பதாகவும், பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டகாரர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் சிலையின் தடுப்புசுவரை சேதப்படுத்தியதாக கூறி பஸ் டிரைவர் மது என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.