சந்திர திரிகோண மலையில் இன்று தத்தா ஜெயந்தி விழா
சிக்கமகளூருவில் உள்ள சந்திர திரிகோண மலையில் இன்று (வியாழக்கிழமை) தத்தா ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு செய்தார்.
சிக்கமகளூரு:-
சந்திர திரிகோண மலை
சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோண மலையில் பாபாபுடன் கிரி தத்தா கோவில் அமைந்துள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் இருதரப்பினரும் தத்தா கோவிலை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தத்தா கோவில் விவகாரத்தில் மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், கர்நாடக அரசு தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திர திரிகோண மலையில் தத்தா ஜெயந்தி விழா தொடங்கியது. இதையொட்டி ஏராளமான இந்துக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் தத்தா ஜெயந்தியையொட்டி தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்களை நியமித்து 8 பேர் கொண்ட குழு உத்தரவிட்டது.
அனுசியா ஜெயந்தி
அதன்படி நேற்று முன்தினம் 2 அர்ச்சர்களும் தத்தா பீடத்தில் பூஜை செய்தனர். தத்தா ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் அனுசியா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் காவி கொடி மற்றும் காவி தலைப்பாகை அணிந்து கலந்துகொண்டனர். அவர்கள் நகரில் முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சந்திர திரிகோண மலைக்கு சென்று தத்தா பீடத்தை தரிசனம் செய்தனர்.
சோபா யாத்திரை
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று சிக்கமகளூருவில் சோபா யாத்திரை நடந்தது. இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு நகரில் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் காவி உடை மற்றும் காவி கொடியுடன் கோஷம் எழுப்பியப்படி ஊர்வலமாக வந்தனர். மேலும் சிக்கமகளூரு நகர் முழுவதும் காவி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதனால் சிக்கமகளூரு நகரமே காவி மயமாக காட்சி அளித்தது.
இதையடுத்து அவர்கள் சந்திர திரிகோண மலைக்கு சென்று தத்தா பாதத்தை வழிபட்டனர். இந்த ஊர்வலத்தையொட்டி சிக்கமகளூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி யாத்திரை அமைதியாக நடந்தது.
தத்தா ஜெயந்தி
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தத்தா ஜெயந்தி விழா இன்று (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. இதையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் இன்று சந்திர திரிகோண மலையில் திரண்டு தத்தா பாதத்தை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் சிக்கமகளூரு மட்டுமின்றி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து அமைப்பினர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்திர திரிகோண மலைக்கு வருவார்கள்.
இதையொட்டி சந்திர திரிகோண மலையில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிக்கமகளூரு நகர் மற்றும் சந்திர திரிகோண மலை பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
அலோக் குமார் ஆய்வு
இந்த நிலையில் சந்திர திரிகோண மலையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
கடந்த மாதம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் நடந்ததால், சிக்கமகளூரு நகர் மற்றும் சந்திர திரிகோண மலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.