முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
முலாயம்சிங் யாதவ்
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "முலாயம்சிங் யாதவ் மரணம் அடைந்த தகவல் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ராம்மனோகர் லோகியா, ராஜ் நாராயண் போன்ற தலைவர்களின் வழிகாட்டிதலின்படி அரசியலில் உயர்ந்த பதவிக்கு வந்தவர் முலாயம்சிங் யாதவ். நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அவர் சிறையில் இருந்தார். சமாஜ்வாடி கட்சியை தொடங்கி உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக 3 முறை பணியாற்றினார். அவரது ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.
மதச்சார்பற்ற கொள்கை
தேவேகவுடா தனதுடுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முலாயம்சிங் யாதவ் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். எனது நீண்ட கால நண்பர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார்" என்றார்.
சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மதவாதி சக்திகளுக்கு எதிராக போராடினார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.