பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தது கடன் சுமை பட்ஜெட்


பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தது கடன் சுமை பட்ஜெட்
x

பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தது கடன் சுமை பட்ஜெட் என்று யு.டி.காதர் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.

மங்களூரு:-

கடன் சுமை பட்ஜெட்

முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான யு.டி.காதர் எம்.எல்.ஏ. நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தது கடன் சுமை பட்ஜெட். இந்த பட்ஜெட்டை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் கடன் கடந்த 1947-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ரூ.2,42,000 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 2018 முதல் 2023-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த கடன் ரூ.5,64,814 கோடியாக உள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன் ரூ.3 லட்சம் கோடிஅதிகரித்துள்ளது.

பா.ஜனதா அரசு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,84,000கோடி கடன் வாங்கி உள்ளது. இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்காக மேலும் கடன் வாங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த கடன் எப்போது அடைக்கப்படும்?.

பொய்யான நம்பிக்கை

இந்த பட்ஜெட் மூலம் கடலோர மாவட்ட மக்களை முட்டாளாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. பொய்யான நம்பிக்கையை அளித்து பொதுமக்களை பா.ஜனதா ஏமாற்றி வருகிறது. கடலோர மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் கடலோர மாவட்டத்துக்கு பட்ஜெட்டில் சிறப்பு மானியம் கூட அறிவிக்கப்படவில்லை. ராணி அப்பக்காவுக்கு நினைவு பூங்கா அமைக்கப்படும் என்று

மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தாா. ஆனால் இதற்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடல் அரிப்பால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஆனால் பட்ஜெட்டில் கடல் அரிப்புக்கு நிரந்தர அல்லது தற்காலிக தீர்வுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கடன்கள் தள்ளுபடி

காங்கிரஸ் கட்சி முன்பு ஆட்சியில் இருந்தபோது, எந்த வரியும் விதிக்கவில்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் தற்போதைய அரசு ஏழைகள் மீதான வரியை உயர்த்தி, பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமையை சீரமைப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். பா.ஜனதாவை மக்கள் தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story