விமான நிலையம் அமைப்பது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு; மந்திரி சோமண்ணா பேட்டி


விமான நிலையம் அமைப்பது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு; மந்திரி சோமண்ணா பேட்டி
x

தர்மஸ்தலா அருகே பயணிகளின் வசதிக்காக விமான நிலையம் அமைப்பது குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி சோமண்ணா கூறினார்.

மங்களூரு;

நலத்திட்ட உதவிகள்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி துறை மந்திரி சோமண்ணா கலந்து கொண்டு 1,500 பயனாளிகளுக்கு வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சோமண்ணா கூறியதாவது:-

அரசு சார்பில் ஏழை, எளிய பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1,500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3,160 பயனாளிகளுக்கு விரைவில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகளை தாலுகா அலுவலக அதிகாரிகள் கண்டறிந்து அவர்களுக்கு அரசின் பயன்களை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், பெல்தங்கடி தாலுகாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 48 பஞ்சாயத்துகளில் இந்த வளர்ச்சி பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.

100 ஏக்கர் நிலப்பரப்பு

தர்மஸ்தலா முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. தர்மஸ்தலாவுக்கு கர்நாடகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தர்மஸ்தலா அருகே சிறிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளது.

எனவே பக்தர்களின் வசதிக்காக தர்மஸ்தலா அருகே 100 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்கப்படும். அதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மேலும், அதற்கு மந்திரி சபையில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story