கோலார் தங்க சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
கோலார் தங்க சுரங்கத்ைத தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
மத்திய சுரங்க செயலாளர் குழு ஆய்வு
மத்திய சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமையில் மத்திய அதிகாரிகள் குழுவினர் கோலார் தங்க சுரங்க பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். முதலில் தங்க சுரங்க அலுவலகமான சுவர்ண பவனுக்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள அதிகாரியிடம் தங்க சுரங்க நிலைமை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தங்க சுரங்க பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோலார் எம்.பி. முனிசாமி, அவரை வரவேற்றார்.
பின்னர் மத்திய சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோலார் தங்கவயல் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்படும்.
தனியாரிடம் ஒப்படைப்பு
அத்துடன் கோலார் தங்கவயலில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் தங்கச்சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. தங்க சுரங்கத்தில் இன்னும் தங்கம் உள்ளதால் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சுரங்கத்தை நடத்த அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தங்க சுரங்கத்தின் பெருமையை பாதுகாக்கும் வகையில் சுரங்க ஆராய்ச்சி மையம் அமைக்கவும், தங்க சுரங்கத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கோலார் தங்கவயலில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வீடுகளுக்கு பட்டா
தங்க சுரங்க பகுதியில் குடியிருப்போரின் வீடுகளுக்கு பட்டா வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுரங்க தொழிலாளிகள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் வசிக்கும் வீடுகளுக்கும் பட்டா வழங்கப்படும். காலியாக உள்ள நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க மத்திய சுரங்கத்துறை மந்திரி மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன் மூலம் தொழில் பூங்கா அமைப்பதால் கோலார் தங்கவயலில் வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வரும்
இவ்வாறு அவர் கூறினார்.