டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடகம் பங்கேற்பு; பத்ம விருது பெற்ற பெண்களின் சாதனையை மையப்படுத்தி அலங்கார ஊர்தி
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பத்ம விருது பெற்ற பெண்களின் சாதனையை மையப்படுத்தி கர்நாடக அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அலங்கார ஊர்தி
குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு இந்த முறை அனுமதி நிராகரிக்கப்பட்டது. இதற்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளும் பா.ஜனதா கட்சியினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து அந்த அணிவகுப்பில் கர்நாடகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கர்நாடக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, நாரி சக்தி (பெண் சக்தி) என்ற பெயரில் ஒரு அலங்கார ஊர்தியை வடிவமைத்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சாளுமரத திம்மக்கா, சூலுகிட்டி நரசம்மா, விருக்ச மாதே துளசி கவுடா ஆகியோரின் சாதனைகளை மையப்படுத்தி இந்த ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்கள் 3 பேரும் தங்களின் சத்தமில்லாத சாதனைகளால் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். அவர்கள் மூவருக்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது
இந்த அலங்கார ஊர்தியில் அந்த மூன்று பெண்களின் படத்தை உருவாக்கி, அவர்கள் செய்த பணிகளை அதில் உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை கமிஷனர் ஹா்ஷா கூறியதாவது:-
சாலுமரத திம்மக்கா, சூலுகிட்டி நரசம்மா, விருக்ச மாதே துளசிகவுடா ஆகிய மூன்று பேரும் எளிய குடும்பத்தில் இருந்து வந்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது. அவர்களின் சாதனையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் 'நாரி சக்தி' என்ற கருத்தை மையப்படுத்தி அலங்கார ஊர்தியை உருவாக்கியுள்ளோம்.
குறுக்கே நிற்கவில்லை
அவர்கள் எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றாலும், சாதனை படைக்க அவர்களுக்கு சாதி, அந்தஸ்து போன்றவை குறுக்கே நிற்கவில்லை. தங்களின் சாதனைகள் மூலம் அவர்கள் உலகின் கவனத்தை ஈர்த்தனர். அந்த பெண்களின் சாதனையை கண்டு கர்நாடகமும், இந்தியாவும் பெருமை கொள்கிறது. இது அலங்கார ஊர்தி கர்நாடகத்தின் அடையாளம் மற்றும் சிறப்பை வெளிப்படுத்துகிறது. பத்தே நாட்களில் இந்த ஊர்தியை தயாரித்துள்ளோம். தொடர்ச்சியாக 14-வது ஆண்டாக குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அலங்கார ஊர்தி பங்கேற்கிறது. இது அனைத்து கன்னடர்களுக்கும் பெருமை மிக்க தருணம் ஆகும்.
இவ்வாறு ஹர்ஷா கூறினார்.