எல்லாபுரா தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்


எல்லாபுரா தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்
x

பா.ஜனதா மந்திரி சிவராம் ஹெப்பாரை களமிறக்க காங்கிரஸ் திட்டம்?

கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முன்கூட்டியே தங்கள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. ஆனால் பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறை வேட்பாளர்களை நுண்ணிப்பாக அடையாளம் கண்டு தேர்வு செய்வதால், பல முக்கிய மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பீதியில் உள்ளனர். இதனால் சிலர் காங்கிரசில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் எல்லாபுரா தொகுதியை சேர்ந்த மந்திரி சிவராம் ஹெப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்காகத்தான் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் எல்லாப்புராவை குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்த வி.எஸ்.பட்டீலுக்கு டிக்கெட் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு செல்வாக்கு குறைவாக இருப்பதாக காங்கிரஸ் எடுத்த கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே வி.எஸ்.பட்டீலுக்கு பதிலாக செல்வாக்கு மிக்க சிவராம் ஹெப்பாரை நிறுத்தி எல்லாபுரா தொகுதியை இந்த முறை நாம் கைப்பற்றி கொள்ளலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் சிவராம் ஹெப்பாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் இதை பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மறுத்துள்ளனர். சிவராம் ஹெப்பார் பா.ஜனதா சார்பில்தான் போட்டியிடுவார். அவருக்கு கட்சி தலைமை உறுதியாக டிக்கெட் வழங்கும். எல்லாப்புராவில் அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால், காங்கிரஸ் வேண்டுமென்றே வதந்தியை கிளப்பி வருகிறது என்று தொண்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர்தான் தெரியவரும், எந்த கட்சி உறுப்பினர்கள், எந்த கட்சியில் இருப்பார்கள், எந்த கட்சியில் சேருவார்கள் என்பது.

அதுவரைக்கும் பா.ஜனதா, காங்கிரஸ் இடையேயான வேட்பாளரை இழுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Next Story