டெல்லியில் திருட்டு சந்தேகத்தில் நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகளை ஆடைகளை களைந்து சோதனை
டெல்லியில் திருட்டு சந்தேகத்தில் நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகள் இருவரின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் திருட்டு சந்தேகத்தில் நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகள் இருவரின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வார்டன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தலைநகர் டெல்லியில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின்கீழ் அகில்யாபாய் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்துவருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அந்த விடுதியில் உள்ள பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு மாணவிகள் 2 பேர், பிற மாணவிகள் மற்றும் வார்டனுடன் வெளியே ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிவந்தனர்.
அப்போது, வார்டன் தனது பேக்கில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்தார். விடுதியில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட 2 மாணவிகள்தான் தனது பேக்கில் இருந்து பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று அவர் சந்தேகப்பட்டார்.
அதையடுத்து, மற்ற மாணவிகளின் உதவியுடன் அந்த 2 மாணவிகளையும் ஆடைகளை களைந்து அவர் சோதனை போட்டார். அப்போது பணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுபற்றி அந்த மாணவிகள் மூலம் தகவலறிந்த அவர்களின் பெற்றோர், கோபத்துடன் விடுதிக்கு வந்தனர். தங்கள் மகள்களை ஆடைகளை களைந்து வார்டன் துன்புறுத்தியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்திலும், போலீசிலும் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். குறிப்பிட்ட வார்டன் அந்த விடுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக, கல்லூரி முதல்வர், மூத்த ஆசிரியர்கள் அடங்கிய ஒரு உண்மை கண்டறியும் குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது.