வட மாநில தொழிலாளர்கள் வதந்தி விவகாரம்: தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட பிரசாந்த் உம்ராவிற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


வட மாநில தொழிலாளர்கள் வதந்தி விவகாரம்:  தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட பிரசாந்த் உம்ராவிற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2023 11:15 AM IST (Updated: 7 March 2023 11:17 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை மார்ச் 20ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட வட இந்தியர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.

ஆனால் திடீரென தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என பொய்யை வட இந்திய பாஜகவினர் சமூக வலைதளங்களில் திட்டமிட்டே பகிர்ந்தனர். இதனை நாடு முழுவதும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் தமிழ்நாட்டில் வட இந்தியர்களிடையே அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு, இத்தகைய வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தொடங்கியது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் 4 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீதும் இதேபோல தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் அவரை கைது செய்ய டெல்லி, உபிக்கு தமிழ்நாடு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் பிரசாந்த் உம்ரா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ரா மனுத் தாக்கல் செய்து இருந்தார். இம்மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா, இதுவரை மன்னிப்புகூட கேட்கவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியது. வந்தந்தியை பரப்புவது இந்தியாவையே பிளக்கும் செயல், தேசவிரோத செயல் என வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்து உமாராவை மார்ச் 20ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது டெல்லி ஐகோர்ட்டு. வதந்தி வழக்கில் முன் ஜாமீன் கோரிய உ.பி.பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவின் மனு முடித்து வைத்தது.


Next Story