டெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு ஜூன் 9 வரை காவல்


டெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு ஜூன் 9 வரை காவல்
x

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், சுகாதார மந்திரியாக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்து வருகிறார்.

உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கவனித்து வருகிறார்.

சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் பல்வேறு கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் 'ஹவாலா' பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக சத்யேந்தர் ஜெயின் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக கடந்த மாதம் அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் சில மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. கேள்விகளுக்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் கூறியது. ஜெயின் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், டெல்லி சுகாதாராத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story