மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா எதிரொலி: டெல்லியில் 2 புதிய மந்திரிகளை நியமிக்க கவர்னருக்கு பரிந்துரை


மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா எதிரொலி:  டெல்லியில் 2 புதிய மந்திரிகளை நியமிக்க கவர்னருக்கு பரிந்துரை
x

டெல்லி மந்திரிசபையில் இருந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் விலகலை தொடர்ந்து, சவுரப் பரத்வாஜ், ஆதிஷி ஆகியோரை மந்திரிசபையில் சேர்க்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மந்திரிசபையில் இருந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் விலகலை தொடர்ந்து, சவுரப் பரத்வாஜ், ஆதிஷி ஆகியோரை மந்திரிசபையில் சேர்க்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை கைது செய்தது.

சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்து விட்டது. இதனால் தான் வகித்து வந்த துறை முதல்-மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார்.

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மந்திரிசபையில் அங்கம் வகித்து வரும் சத்யேந்திர ஜெயின் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகா மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தன.

இதனால் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்தார். இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சத்யேந்திர ஜெயினும், தன் மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இருவரின் ராஜானாமாவை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள் ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சவுரப் பரத்வாஜ், ஆதிஷி ஆகியோரை புதிய மந்திரிகளாக நியமிக்க டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் வினய் குமார் சக்சேனாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் கைதுக்குப் பின்னர் அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story