மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, தேவேகவுடா வாழ்த்து
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வானதற்கு தேவேகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள எனது நண்பர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என்னுடைய இதய பூர்வமான வாழ்த்துக்கள். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது காங்கிரசுக்கும், கர்நாடகத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணம். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் பலத்தை மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடவுள் வழங்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 'அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ள கர்நாடக மாநில மூத்த அரசியல் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு அரசியலில் பரந்த அனுபவம் உள்ளது. காங்கிரஸ் கட்சி மீதான அசைக்க முடியாத விசுவாசம் அவரை இந்த உயரிய பதவிக்கு கொண்டு வந்துள்ளது. கார்கேவால் காங்கிரஸ் கட்சி பலன் அடைய எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.