ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவு
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ .30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது
புதுடெல்லி,
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த நபரின் பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ .30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது பெண் பயணியின் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.