தார்வார் மாவட்டத்தில் 4 வீடுகளில் ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தார்வார் மாவட்டத்தில் 4 வீடுகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டத்தில் 4 வீடுகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிசென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருமண நிகழ்ச்சி
தார்வார் மாவட்டம் நரேந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் தார்வாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்்காக சென்றார். இதனை அறிந்்த மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய ருத்ரப்பா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில், இருந்த 50 கிராம் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேப்போல், அதேப்பகுதியில் உள்ள கணபதி கித்தூர், வெங்கடப்பா தால்வார், மல்லேசப்பா வீரேஷ் ஆகிய வீடுகளில் மர்மநபர்கள் புகுந்து 350 கிராம் தங்க நகைகள், 450 கிராம் வௌ்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து தகவல் அறிந்த தார்வார் புறநகர் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். ஆனால் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 4 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தார்வார் புறநகர் பகுதியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.