சிக்கமகளூருவில் பாம்பு கடித்து இறந்த பாம்பு பிடி வீரர் வீட்டில் இருந்து 79 பாம்பு குட்டிகள் பறிமுதல்
சிக்கமகளூருவில் பாம்பு கடித்து இறந்த பாம்பு பிடி வீரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 பாம்பு குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் பாம்பு கடித்து இறந்த பாம்பு பிடி வீரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 பாம்பு குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாம்பு பிடி வீரர் சாவு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் நரேஷ். இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு பிடிக்க சென்றிருந்தார். அப்போது விஷப்பாம்பு கடித்து நரேஷ் இறந்தார். இந்த தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மூடிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நரேஷின் வீடு மற்றும் வாகனத்தில் ஏராளமான பாம்புகளை அவர் வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நரேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேரல் ஒன்றில் 79 பாம்பு குட்டிகள் இருந்தது தெரியவந்தது. அந்த பாம்பு குட்டிகளை பிடிப்பதற்காக ஆரிப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பு குட்டிகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அந்த பாம்பு குட்டிகளை வாங்கிய வனத்துறை அதிகாரிகள், அதை மூடிகெரே வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
79 பாம்பு குட்டிகள் மீட்பு
இது குறித்து வனத்துறை அதிகாரி கிராந்தி என்பவர் கூறுகையில்;-
பாம்பு பிடி வீரர் நரேஷின் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணுளி பாம்பு உள்பட 79 பாம்பு குட்டிகளை பிடித்துள்ளோம். இந்த பாம்பு குட்டிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது.
எதற்காக பாம்பு குட்டிகளை பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. விற்பனை செய்வதற்காக வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்திருந்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.