பள்ளம் தோண்டி ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல்; போலீசார் கண்டுபிடித்தனர்
சாகரில், பூந்தோட்டத்தில் பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சாகர் நகரசபை எல்லைக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக சாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சாகர் போலீசார், உணவுத்துறை அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி மூடியதற்கான அடையாளங்கள் இருந்தன.
இதையடுத்து அந்த இடத்தில் மீண்டும் தோண்டி பார்த்தபோது அங்கு ஏராளமான அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல் அருகே மற்றொரு இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்ததில் அங்கு 3 பசுமாடுகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அவற்றின் எண்ணிக்கை மற்றும் அளவை போலீசார் வெளியிடவில்லை. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.