வரும் நாட்களில் டிஜிட்டல் கல்வி முறை அதிகரிக்கும்
வரும் நாட்களில் டிஜிட்டல் கல்வி முறை அதிகரிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
மிகப்பெரிய வாய்ப்பு
பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள ஆர்.வி.கல்லூரி பல் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
மாணவர் பருவம் மிக முக்கியமானது. நான் மாணவராக இருந்த நாட்களை அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டு. கடைசி வரிசையில் உட்காருவது மிகுந்த மகிழ்ச்சியை தரும். நமது நாட்டில் கிடைக்கிற வாய்ப்புகள் வேறு எங்கும் கிடைக்காது. நாம் அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளோம். நாம் ஞானத்தின் நூற்றாண்டில் உள்ளோம். இதில் கர்நாடகம், இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
சாதித்தால் வெற்றி
பிரதமர் மோடிக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது. எல்லாவற்றையும் நேர்மறையாக பார்க்கும் குணம் அவருக்கு உண்டு. முழுமையான மனித பண்புகளை கொண்டவர் மோடி. அவரது தலைமையில் இந்தியாவுக்கு ஒரு தெளிவான தலைமை, குறிக்கோள் கிடைத்துள்ளது. நேரத்தை சரியான முறையில் செலவிடுவதின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
சரியான நேரத்தில் தூங்க வேண்டும். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கை இருக்க வேண்டும். அதை செய்தால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை சாதித்தால் அது தான் வெற்றி.
கேடு விளைவிக்கும்
வட கர்நாடகத்தில் புகையிலை பழக்கம் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களுக்கு இன்னும் டிஜிட்டல் மயம் போய் சேரவில்லை. வரும் நாட்களில் டிஜிட்டல் கல்வி முறை அதிகரிக்கும். கல்வியை டிஜிட்டலில் கற்பிக்கும் முறைக்காக ஒரு தொழில்நுட்பத்தை அரசே உருவாக்கி வருகிறது. சாதனையாளருக்கு சாவு இறுதி அல்ல என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அதனால் நீங்கள் அனைவரும் சாதிக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினர்.