ஜாமீனில் வெளிவந்த நிலையில் மந்த்ரி டெவலப்பர்ஸ் இயக்குனர் மீண்டும் கைது


ஜாமீனில் வெளிவந்த நிலையில்  மந்த்ரி டெவலப்பர்ஸ் இயக்குனர் மீண்டும் கைது
x

அமலாக்கத்துறை விசாரணையின்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில் மந்த்ரி டெவலப்பர்ஸ் இயக்குனர் சுசில் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு: அமலாக்கத்துறை விசாரணையின்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில் மந்த்ரி டெவலப்பர்ஸ் இயக்குனர் சுசில் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வழக்குகள் பதிவாகின

பெங்களூருவை சேர்ந்தவர் சுசில். இவர் மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். இவர் 1,200 வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரம் கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளார். மேலும் அவர் முதலீடு செய்யும் பணத்திற்கு மாறாக நிலத்துடன் கூடிய வீட்டுமனை வழங்குவதாகவும், அதை அடுத்த 7 முதல் 9 ஆண்டுகளில் ஒப்படைத்து விடுவதாகவும் கூறினார்.

பல வருடங்கள் ஆகியும் முதலீடு செய்தவர்களுக்கு அவர் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், வீட்டுமனையும் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சுசில் மீது பெங்களூரு சுப்ரணியா போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின.

பணமோசடி

அதன்பேரில் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். இதற்கிடையே மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு வங்கிகளில் இருந்து கடனாக ரூ.5 ஆயிரம் கோடி பெறப்பட்டது. அவற்றை அந்த நிறுவனம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும், அவரை கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரிடம் விசாரணையும் நடத்தியது. இதற்கிடையே சுசில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசார் சுசிலை கைது செய்தனர். அவரிடம் முறைகேடு மற்றும் பணமோசடி குறித்து அரண்மனை சாலையில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story