அடுத்த மாதம் 17-ந் தேதிக்குள் தேர்தல் செலவு தகவல்களை வழங்காத எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
அடுத்த மாதம் 17-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கு தகவல்களை வழங்காத எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ரூ.40 லட்சம் வரை செலவு
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. கடந்த 13-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வீடு, வீடாகவும், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தியும் பிரசாரம் செய்தனர்.
தற்போது தேர்தல் முடிந்து, முடிவுகளும் வெளியாகி விட்டதால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்தோம் என்பது பற்றிய கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்
பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் தங்களது தொகுதியில் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 37 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருப்பதால், ஜூன் 17-ந் தேதிக்குள் தேர்தலில் போட்டியிட்டவர்கள் அனைவரும் செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக வருகிற 6-ந் தேதியில் இருந்து பயிற்சி பெற்ற 369 அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட்டவர்களிடம் செலவு விவரங்களை பெற உள்ளனர்.
அடுத்த மாதம் 17-ந் தேதிக்குள் செலவு விவரங்களை கொடுக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவே வெற்று பெற்று எம்.எல்.ஏ. ஆகி இருந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.