விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று தபால்துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் வினியோகம்


விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று தபால்துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று தபால்துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் வினியோகம் செய்துள்ளது. மக்கள் நல்ல வரவேற்பு அளித்திருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தபால்துறை மூலமாக மாம்பழங்கள்

கர்நாடகத்தில் விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை பெற்று மக்களுக்கு வினியோகம் செய்யும் பணியை தபால்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த திட்டம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் கொடுக்கும் மக்களுக்கு, அவர்களது வீடுகளுக்கே தபால்துறை மாம்பழங்களை கொண்டு கொடுத்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு தபால்துறை மூலமாக 75 டன் மாம்பழங்களும், கடந்த ஆண்டு (2022) 70 டன் மாம்பழங்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று மக்களின் வீடுகளுக்கே கொண்டு வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 5-ந் தேதியில் இருந்து தபால்துறை மூலமாக மக்களுக்கு மாம்பழங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கி இருந்தது.

19 டன் மாம்பழங்கள் வினியோகம்

அதன்படி, ஏப்ரல் 5-ந் தேதியில் இருந்து கடந்த 12-ந் தேதி வரை 19 டன் (19 ஆயிரம் கிலோ) மாம்பழங்கள் மக்களுக்கு தபால்துறை வினியோகித்துள்ளது. ஆன்லைன் மூலமாக ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 3 கிலோவுக்கு மேல் மாம்பழங்கள் ஆர்டர் கொடுத்தால் மட்டுமே, அவர்களது வீடுகளுக்கு கொண்டு வழங்கப்படும். 3 கிலோவுக்கு குறைவாக ஆர்டர் கொடுக்க முடியாது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தபால்துறை உயர் அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இடைத்தரகர்களிடம் இருந்து வாங்காமல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறுவதால், விலை மற்றும் மாம்பழங்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் ரசாயனம் மூலமாக பழுக்க வைக்கப்படாமல், உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாமல் மாம்பழங்கள் கிடைப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story