ஹாப்காம்ஸ் கடைகளில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனையா?- பொதுமக்கள், ஊழியர்கள் கருத்து
தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் ஹாப்காம்ஸ் காய்கறி கடைகளில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனையா என்பது குறித்து பொதுமக்கள், ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹாப்காம்ஸ் கடைகள்
கர்நாடக தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை மற்றும் செயலாக்க சங்கம் (ஹாப்காம்ஸ்) கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கான சங்கம் ஆகும். இந்த சங்கத்தை தோட்டக்கலைத்துறை இயக்குனராக இருந்த மரிகவுடா என்பவர் தொடங்கினார். இந்த சங்கத்தின் நோக்கம் விவசாயிகள் விளைவித்த பொருட்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தோட்டக்கலைத்துறை கீழ் கர்நாடகத்தில் 276 ஹாப்காம்ஸ் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹாப்காம்ஸ் காய்கறி கடைகள் செயல்படுகின்றன. பெங்களூரு நகர், பெங்களூரு புறநகரில் 238 ஹாப்காம்ஸ் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. கோலாரில் 19 கடைகள் உள்ளன. இதுதவிர மைசூரு, துமகூரு, மண்டியா, மங்களூருவிலும் ஹாப்காம்ஸ் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காய்கறிகளை தவிர தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏழை மக்களுக்கு ஏற்ற கடை
குறைந்த விலைக்கு தரமான பொருட்களை வழங்குவதே இந்த ஹாப்காம்ஸ் கடைகளின் நோக்கம் ஆகும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களை பாதுகாக்க சர்ஜாபுரா, சன்னப்பட்டணா, ஒசக்கோட்டை, கனகபுரா ஆகிய 4 இடங்களில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. சேமிப்பு கிடங்குகளுக்கு பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உடனடியாக பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹாப்காம்ஸ் கடைகளில் விற்பனை எப்படி உள்ளது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த கருத்து பின்வருமாறு:-
பெங்களூரு மாகடி ரோட்டில் வசித்து வரும் நாகம்மா என்பவர் கூறுகையில், "ஹாப்காம்ஸ் காய்கறி கடையில் தரமான காய்கறிகள் கிடைக்கிறது. காய்கறிகள் மட்டுமின்றி தேன், குளிர்பானங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து ஹாப்காம்ஸ் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால் காய்கறிகள் இயற்கையான முறையில் தான் விளைவிக்கப்பட்டு இருக்கும். மற்ற காய்கறி கடைகளை காட்டிலும், ஹாப்காம்சில் விலையும் குறைவாக உள்ளது. ஹாப்காம்ஸ் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்ற கடையாகும்" என்றார்.
தரமான பொருட்கள்
விட்டசந்திராவை சேர்ந்த அம்மு என்பவர் கூறும்போது, "ஹாப்காம்ஸ் காய்கறி கடைகளில் சில நேரங்களில் காய்கறிகள் விலை திடீரென அதிகரிக்கிறது. அங்கு தரமான பொருட்கள் தான் உள்ளது. ஆனாலும் காய்கறி கடைகளை விட ஹாப்காம்சில் ரூ.2 முதல் ரூ.4 வரை சில பொருட்கள் விலை அதிகமாக உள்ளது. ஹாப்காம்ஸ் காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படும் தேன், குல்கந்த் போன்ற பொருட்கள் தரமாக உள்ளது. அவற்றின் விலையும் குறைவாக உள்ளது. ஆனால் காய்கறிகள் விலை அதிகமாக உள்ளது சற்று கவலையாக உள்ளது" என்றார்.
பெங்களூரு இந்திராநகரில் வசித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் கூறுகையில், "ஹாப்காம்ஸ் காய்கறி கடையில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் குல்கந்த் கூட குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கூட அவ்வளவு எளிதில் குல்கந்த்தை வாங்கி விட முடியாது. ஒரு முறை தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் குல்கந்த்தை தேடி அலைந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. ஹாப்காம்சில் அரை கிலோ குல்கந்த் வெறும் ரூ.66-க்கு தான் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குல்கந்தின் விலை அதிகம்" என்றார்.
குறைந்த விலைக்கு...
விஜயநகரில் உள்ள ஹாப்காம்ஸ் கடையின் ஊழியரான தேவராஜ் என்பவர் கூறுகையில், மற்ற காய்கறி கடைகளை விட ஹாப்காம்சில் காய்கறிகள் விலை கூடுதலாக இருப்பதாக ஒரு சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் குறைந்த விலைக்கு ஹாப்காம்சில் தரமான பொருட்கள் கிடைப்பதாக கூறுகின்றனர்.
தரமான பொருட்களை மக்களுக்கு விற்பதே ஹாப்காம்சின் குறிக்கோள். விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். மற்ற காய்கறி கடைகளை விட ரூ.2 முதல் ரூ.3 குறைவாக தான் காய்கறிகளை விற்று வருகிறோம் என்றார்.
சம்பளத்தில் கை வைக்க கூடாது
ராஜாஜிநகரில் உள்ள ஹாப்காம்ஸ் கடையின் ஊழியரான சிவண்ணா என்பவர் கூறுகையில், "ஹாப்காம்சில் காய்கறிகள் மட்டுமின்றி தேன், குல்கந்த், குளிர்பானங்களும் கிடைக்கின்றன. ஒரு கிலோ தேன் ரூ.395-க்கும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ.125-க்கும், குல்கந்த் அரை கிலோ ரூ.66-க்கும் ஹாப்காம்சில் விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகள் விலையில் சற்று ஏற்ற, இறக்கம் இருக்கும். ஒவ்வொரு ஹாப்காம்ஸ் கடை ஊழியர்களும் மாதம் ரூ.1½ லட்சம் வருமானம் ஈட்டி தர வேண்டும் என்று ஹாப்காம்ஸ் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாவிட்டால் சம்பளத்தை குறைத்து தான் தருகின்றனர். ஹாப்காம்சில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். எனது கடையில் தினமும் ரூ.ஆயிரம் முதல் ரூ.1,500 வரை தான் விற்பனை ஆகிறது. தினமும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் ரூ.30 கமிஷன் தருகின்றனர். ஒரு சில நேரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவது இல்லை. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஹாப்காம்ஸ் கடைகள் திறந்து இருக்கிறது. வாடிக்கையாளர் வரவில்லை என்றால் வியாபாரம் ஆகாது. இதனால் இலக்கை அடையவில்லை என்று சம்பளத்தில் கை வைப்பதைநிறுத்த வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்" என்றார்.