எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக செயல்படக்கூடாது


எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக செயல்படக்கூடாது
x
தினத்தந்தி 11 March 2023 1:52 AM IST (Updated: 11 March 2023 1:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக செயல்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

கருத்துகளை தெரிவித்தனர்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தனர். இந்த குழுவில் தேர்தல் கமிஷனர்கள் அனுப் சந்திரபாண்டே, அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முதல் நாளில் சட்டசபை தேர்தல் குறித்து பெங்களூரு விகாச சவுதாவில் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விவரித்தனர். அதைத்தொடர்ந்து பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து, தேர்தல் குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

மாவட்ட கலெக்டர்கள்

அதைத்தொடர்ந்து ஜனநாயகம் குறித்து நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் 2-வது நாளாக நேற்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பெங்களூரு விகாச சவுதாவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் தேர்தல் கமிஷனர் சந்திரபாண்டே, அருண் கோயல், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், தேர்தலை நடத்துவதற்காக மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.

மறுக்கப்படக்கூடாது

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச்சாவடிகள், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துக்கூறினர். கலெக்டர்கள் தங்களின் மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் தலைமை தேர்தல் கமிஷனர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அரசியல் கட்சி தலைவர்கள், சில அதிகாரிகள் ஒரு கட்சிக்கு சாதகமாக பணியாற்றுவதாக புகார் கூறியுள்ளனர். அதிகாரிகள் அரசின் சேவகர்கள். அதனால் எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக செயல்படக்கூடாது. நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். வாக்குரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. தகுதியானவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது.

உரிய நடவடிக்கை

மாநில எல்லையில் சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் போன்றவை வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜீவ்குமார் பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை தலைமை தேர்தல் கமிஷனர் விளக்குகிறார்.


Next Story