டாக்டர்கள் பொறுமையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
டாக்டர்கள் பொறுமையுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:-
கற்க வேண்டிய பாடம்
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
நீங்கள் 5 ஆண்டுகள் காலம் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்களுக்கு எதிர்காலம் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறை மாணவராக இருந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மாணவராக இருக்கிறார்கள். பட்டம் பெற்ற உடனேயே எல்லாம் முடித்துவிட்டது என்று நீங்கள் நினைக்க கூடாது. கல்லூியில் பாடங்களை படித்து தோ்வு எழுதுகிறோம். ஆனால் நீங்கள் அனுபவம் மூலம் கற்க வேண்டிய பாடம் இன்னும் நிறைய உள்ளது.
சுலபமானது அல்ல
டாக்டராக உங்களுக்கு கருணை இருக்க வேண்டும். உங்களிடம் வரும் நோயாளிகளிடம் பொறுமையுடன் நடந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் கற்ற கல்வி உங்களை காப்பாற்றும். கொரோனா நெருக்கடி காலத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவுகளால் நாடு இன்று பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது.
130 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் கொரோனாவை எதிர்கொள்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த நெருக்கடியான நேரத்தில் டாக்டர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் நாமே தடுப்பூசியை உற்பத்தி செய்து 200 கோடி டோஸ் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.