துமகூருவில் கர்ப்பிணி-2 சிசுக்கள் பலி: அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் ஆவணம் கேட்க கூடாது-சுகாதாரத்துறை அறிவிப்பு
துமகூருவில் கர்ப்பிணி, 2 சிசுக்கள் பலியானதன் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆவணம் கேட்க கூடாது என்றும், அப்படி மீறி கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு: துமகூருவில் கர்ப்பிணி, 2 சிசுக்கள் பலியானதன் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆவணம் கேட்க கூடாது என்றும், அப்படி மீறி கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு டாக்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆவணம் தேவை இல்லை
துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்ணை உள்நோயாளியாக சேர்த்து பிரசவம் பார்க்காமல் திருப்பி அனுப்பியதாகவும், அதனால் அந்த பெண் 2 சிசுக்களுடன் இறந்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் பேரில் பணியில் இருந்த டாக்டர் மற்றும் 3 நர்சுகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் கீழ்கண்ட அம்சங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணியாக இருப்பவர்களின் தாய் கார்டு, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்றவை இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவசர நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த விதமான ஆவணமும் தேவை இல்லை.
கடும் நடவடிக்கை
அவசர நேரத்தில் எந்த ஆவணமும் கேட்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு ஆஸ்பத்திரிகளின் கடமை ஆகும். துமகூருவில் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் ஒருமுறை அதுகுறித்த அம்சங்களை குறிப்பிடுகிறோம். சுகாதார சேவை அதாவது சிகிச்சை அளிக்கும்போது, நாடு, சாதி, பிரிவு, பொருளாதார நிலையை கேட்கக்கூடாது. அவசர நேரத்தில் நோயாளிகளின் வலிக்கு சிகிச்சை அளிப்பது டாக்டர், நர்சுகள் மற்றும் பணியாளர்களின் முக்கிய கடமை ஆகும்.
அதனால் அரசு ஆஸ்பத்திரிகள் அவசர நேரத்தில் நோயாளிகளிடம் ஆவணங்களை வழங்கும்படி வலியுறுத்த கூடாது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் பணியாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Documents should not be asked from a patient who comes for emergency treatment in a government hospital