சீன ஊடுருவல் விவகாரம் ராணுவம் சொல்வதில் நம்பிக்கை இல்லையா? - காங்கிரசுக்கு பா.ஜனதா கேள்வி
சீன ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி பேட்டி அளிக்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கூறியிருந்தார்.
புதுடெல்லி,
சீன ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி பேட்டி அளிக்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கூறியிருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும்வகையில், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதன்சு திரிவேதி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கவுரவ் கோகாய் தனது பேட்டியில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சீன ஊடுருவல் குறித்த தகவல்களை மறுத்ததாக கூறியுள்ளார். இந்த பிரச்சினையில், ராணுவம் சொல்வதில் காங்கிரசுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?
முப்படை தலைமை தளபதி சொன்னதை நம்புகிறதா? இல்லையா? அல்லது அவரது கருத்தை வைத்து அரசியல் நடத்த விரும்புகிறதா?
ஊழல் வழக்கில் (நேஷனல் ஹெரால்டு) கட்சி தலைவரும், முன்னாள் தலைவரும் ஜாமீனில் இருக்கும் ஒரே கட்சி, காங்கிரஸ்தான். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் கடனை தனது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் அடைக்கவில்லை. கடன்பட்ட அந்த நிறுவனத்தின் சொத்துகளை அபகரிப்பதுதான் காங்கிரசின் நோக்கமா?
ஆனால், சோனியாகாந்தி குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு அரசுத்துறைகள் உள்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ரூ.100 கோடி நன்கொடை கிடைக்க காங்கிரஸ் வழிவகை செய்தது. இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.