கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க காங்கிரசுக்கு தைரியம் உள்ளதா?-ஜனதாதளம் (எஸ்) கேள்வி
கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க காங்கிரசுக்கு தைரியம் உள்ளதா? என ஜனதாதளம் (எஸ்) கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-தேவேகவுடா குறித்து காங்கிரசின் ராஜண்ணா சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இதனால் ராஜண்ணா மீது ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி பொறுப்பு அல்ல. ராஜண்ணாவை கைகூப்பி கேட்கிறேன் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எங்களிடம் வந்து கேட்காதீர்கள். தேவேகவுடா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது பற்றி ராஜண்ணாவிடம், டி.கே.சிவக்குமார் விளக்கம் கேட்க வேண்டும். தேவேகவுடா ஒரு சாதியின் சொத்து இல்லை.
அவர் இந்த தேசத்தின் சொத்து. நாங்கள் பா.ஜனதாவின் பி டீம் இல்லை. காங்கிரஸ் தான் பா.ஜனதாவின் பி டீம். சட்டசபை தேர்தலில் போட்டியிட 110 வேட்பாளர்கள் தங்களிடம் இல்லை என்று காங்கிரஸ் ஒப்புக்கொண்டு உள்ளது. எங்கள் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக குமாரசாமியை ஏற்கனவே அறிவித்து விட்டோம். ஆனால் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி வேட்பாளரை இப்போதே அறிவிக்க தைரியம் உள்ளதா?.
இவ்வாறு அவர் கூறினார்.