நாட்டை பிளவுபடுத்தியது நேரு தான் என்பது ராகுல் காந்திக்கு தெரியவில்லையா?-மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கேள்வி


நாட்டை பிளவுபடுத்தியது நேரு தான் என்பது ராகுல் காந்திக்கு தெரியவில்லையா?-மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கேள்வி
x

நாட்டை பிளவுபடுத்தியது நேரு தான் என்பது ராகுல் காந்திக்கு தெரியவில்லையா? என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு: நாட்டை பிளவுபடுத்தியது நேரு தான் என்பது ராகுல் காந்திக்கு தெரியவில்லையா? என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வளமான நாடு

கர்நாடக பா.ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது:-

மோடி பிரதமரான பிறகு நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது. வளமான நாடு உருவாகி வருகிறது. இன்னொரு புறம் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடத்துகிறார். நாட்டை பிளவுபடுத்தியது நேரு தான் என்பது அவருக்கு தெரியவில்லையா?. கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

குடும்ப அரசியல்

பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது இங்குள்ள கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது. பிரதமர் மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் நாட்டின் பிரதமராக பணியாற்றி வருகிறார். மற்றொருபுறம் காங்கிரஸ் குடும்ப அரசியலை செய்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் அதிகமாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பின்தங்கிய சமூகங்களின் மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக பிரதமர் மோடி நிரந்தர ஆணையத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அங்கு பின்தங்கிய சமூகங்களுக்கு எதிராக செயல்பட்டனர். பசவராஜ் பொம்மை பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.

சகித்துக்கொள்ள மாட்டோம்

மதமாற்ற தடை, பசுவதை தடை சட்டங்களை இயற்றியுள்ளோம். பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்துள்ளோம். அந்த அமைப்பை காங்கிரஸ் ஆதரித்து வந்தது. பயங்கரவாதிகள், தேசத்துரோகிகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதே போல் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story