வளர்ச்சி பணிகளுக்கு நிதியை குறைக்க கூடாது;சித்தராமையாவுக்கு, பசவராஜ் பொம்மை கடிதம்


வளர்ச்சி பணிகளுக்கு நிதியை குறைக்க கூடாது;சித்தராமையாவுக்கு, பசவராஜ் பொம்மை கடிதம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, வளர்ச்சி பணிகளுக்கு நிதியை குறைக்க கூடாது என்று கோரி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு:-

இது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அனைவருக்கும் தெரியும்

முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கொடுத்த 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறீர்கள். அதிலும் நிதித்துறை அதிகாரிகளுடன் தாங்கள் ஆலோசனை நடத்தியது அனைவருக்கும் தெரியும்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி தேவை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இந்த திட்டங்களை அமல்படுத்தும்போது முக்கிய துறைகளான கல்வி, சுகாதாரம், பெண்கள் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, விவசாயிகள், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்க வேண்டியது அவசியம் என்று மக்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது.

நிதியை குறைக்க கூடாது

இதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். விவசாயிகளுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை எக்காரணம் கொண்டும் குறைக்க கூடாது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை வழங்க ரூ.3,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியையும் குறைக்க கூடாது. விவேகா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிதாக 9 ஆயிரத்து 556 கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதற்கான நிதியையும் குறைக்க கூடாது.

விவசாயிகள் வித்யாநிதி திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் பயன் பெறுகிறார்கள். ரத்த சுத்திகரிப்பு, புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை நிறுத்த கூடாது.

வீடு கட்டும் திட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம், தலித், பழங்குடியினருக்கான நிதியை குறைக்க கூடாது. இதே போல் வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், கிராமங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் திட்டங்களுக்கு நிதியையும் குறைக்க கூடாது. இது மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகளுக்கு நிதியை குறைக்க கூடாது.

நிதி பற்றாக்குறை இன்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாநில மக்களுக்கு முழுமையான தகவலை வழங்க வேண்டும். உத்தரவாத திட்டங்களில் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மக்களின் மீது கூடுதல் சுமையை சுமத்தக்கூடாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


Next Story