குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாட கூடாது
பள்ளிகளில் தியான வகுப்புகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளின் வாழ்க்கையில் அரசு விளையாட கூடாது என்று கூறி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு குழப்பங்கள்
கா்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் யோகா-தியான வகுப்புகளை அறிமுகம் செய்வதற்கு எனது ஆட்சேபனை இல்லை. ஆனால் பள்ளிகளில் எது முக்கியம்?. அங்கு கல்வி தானே முக்கியம். பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதே கேள்வி. ஒருபுறம் பள்ளிகளை நடத்த பொதுமக்களிடம் பிச்சை எடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் தினந்தோறும் மாயாஜாலத்தை செய்து கொண்டிருப்பதை கண்டிக்கிறேன்.
பி.சி.நாகேஸ் பள்ளி கல்லித்துறை மந்திரியாக ஆன நாளில் இருந்து பாடத்திட்டங்களை திருத்துதல், ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவரது மனநிலை சீரான நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அவர் ஊழல்களில் மூழ்கியுள்ளார். யோகா, தியானம் மற்றவர்களை விட மந்திரி பி.சி.நாகேசுக்கு தான் அதிகம் தேவைப்படுகிறது.
பள்ளிகளை மூடினர்
கொரோனாவை சரியான முறையில் நிர்வகிக்காததால் பள்ளிகளை மூடினர். குழந்தைகளின் கைகளில் செல்போன்களை வழங்கினர். இப்போது குழந்தைகளிடம் இருந்து செல்போன்கைளை பறிக்க தியான வகுப்புகளை தொடங்கியுள்ளனர். இது பைத்தியக்காரத்தனமான முடிவு. இளம் குழந்தைகள் ஆடி-பாடி படிக்க வேண்டும். அதற்கு பதிலாக குழந்தைகளை அறையில் போட்டு தியானம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினால் உடல் ரீதியாக அவா்கள் இன்னும் சோர்வடைவார்கள்.
முதலில் தேவைக்கு ஏற்ப ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். கற்றலுக்கு தேவையான உபகரணங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பள்ளிகளில் கலை, இசை, விளையாட்டு பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதை விடுத்து தங்களின் அரசியல் கொள்கைகளை புகுத்தி அரசு குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாட கூடாது.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.