வரதட்சணை கொடுமை: தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


வரதட்சணை கொடுமை: தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:45 AM IST (Updated: 1 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா;

காதல் திருமணம்

சிவமொக்கா டவுன் நியூ மண்டலி பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி(வயது 23). இவரும், நாகராஜ் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த சில நாட்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் லட்சுமியை, அவரது கணவர் நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சாதி பெயரை சொல்லி திட்டி வந்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதுமட்டுமல்லாமல் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து லட்சுமி தனது பெற்றோரிடம் கூறியிருந்தார். அவரது பெற்றோர், நாகராஜின் குடும்பத்தினரை சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நாகராஜ் மற்றும் அவரது பெற்றோர் மீண்டும் லட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொட்டபேட்டை போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசில் புகார்

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட லட்சுமியின் தாயார் ரத்தினம்மா தொட்டபேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தனது மகள் லட்சுமியிம் அவரது கணவர் நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக அவள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.


Next Story