விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு நீர்பாசனத்துறை அலுவலகத்தின் கார், பொருட்கள் ஜப்தி
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு சிறிய நீர்பாசனத்துறை அலுவலகத்தின் கார், பொருட்கள் ஜப்தி தார்வார் கோர்ட்டு
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கூலி கேரி கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு இந்திரா காந்தி திட்டத்தின் கீழ் ஏரி, கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகளுக்காக கூலி கேரி கிராமத்தை சேர்ந்த வீரண்ணா, சித்தலிங்கப்பா, நாகசெட்டி ஆகியோரிடம் இருந்து 13 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தனர். இந்த நிலத்திற்காக அப்போது ஏக்கருக்கு ரூ.14,184 இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போதை காலக்கட்டத்திற்கு இந்த பணம் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் மாநில அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகள் தரப்பில் கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்று தார்வார் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற நீதிபதி விசாரணை நடத்தி 2005-ம் ஆண்டு ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்து 792 வழங்கவேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை மாநில அரசு வழங்க தவறினால், சிறிய நீர்பாசனத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்து வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் கோர்ட்டு தரப்பில் சிறிய நீர்பாசனத்துறை அலுவலகத்தில் இருந்த கார் மற்றும் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.