இரட்டை குழந்தைகளை மூச்சுதிணறடித்து கொன்று நாடகமாடிய தொழிற்சாலை ஊழியர்
குடும்பத்தகராறில் இரட்டை குழந்தைகளை மூச்சுதிணறடித்து கொன்று நாடகமாடிய தொழிற்சாலை ஊழியர் போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே:
இரட்டை குழந்தைகள்
தாவணகெரே (மாவட்டம்) டவுனில் ஆஞ்சநேயா மில் பகுதியை சேர்ந்தவர் அமர கித்தூர் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி ஜெயலட்சுமி என்ற மனைவியும், அத்வைத் (4), அன்வீத் (4) என்ற இரட்டை மகன்களும் உண்டு. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் பகுதியை சேர்ந்த அமர கித்தூர் தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவில் உள்ள தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் தாவணகெரேயில் குடியேறினார். இந்த நிலையில் கணவன், மனைவி அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக ெசால்லப்படுகிறது. இதற்கிடையே அமர கித்தூரின் மனைவி ஜெயலட்சுமி விஜயாபுராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மூச்சுதிணறடித்து கொலை
இதன்காரணமாக அமர கித்தூர், நேற்று தனது மகன்களையும் காரில் அழைத்துக்கொண்டு விஜயாப்புரா செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள சாலகெரே சுங்கச்சாவடி அருகே மகன்களை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் காரில் வைத்து 2 மகன்களின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டியுள்ளார். இதில் 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதையடுத்து மகன்களின் உடல்களை அதே காரில் போட்டு தாவணகெரேவுக்கு திரும்பி வந்துள்ளார். தனது குழந்தைகள் திடீரென்று மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வித்யாநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அமர கித்தூரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்பத் தகராறில் இரட்டை குழந்தைகளை தானே வாயில் பிளாஸ்திரி ஒட்டி மூச்சுத்திணறடித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.