அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளிய 11 லாரிகள் பறிமுதல்


அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளிய 11 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தஹள்ளி தாலுகாவில் அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளிய 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவமொக்கா-

தீர்த்தஹள்ளி தாலுகாவில் அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளிய 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகன சோதனை

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் சிவமொக்காவில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான செல்வமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூர், ஆகும்பே, பக்களாபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் மர்ம நபர்கள் லாரிகளில் அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளுவதாக தீர்த்தஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீர்த்தஹள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கஜானா வாமன சூத்ரா தலைமையில் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து மாளூர், ஆகும்பே, பக்களாபுரா ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதிகளில் லாரிகளில் ஆற்று மணல் கடத்தியவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.

13 பேர் மீது வழக்கு

அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் மாளூர், ஆகும்பே, பக்களாபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் ஆற்று மணலுடன் நின்றிருந்த 11 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் தீர்த்தஹள்ளி பகுதியில் அனுமதி இன்றி ஜல்லிக்கற்கள் கடத்துவதாக தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீர்த்தஹள்ளி பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் ஜல்லிக்கற்கள் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் லாரிகளில் வந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து 2 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் 2 லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடும் நடவடிக்கை

சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதுபோன்ற வாகன சோதனை தொடர்ந்து நடத்்தப்படும். ேதர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story