காரில் கடத்திய ரூ.50 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்; 8 பேர் கைது
பெங்களூரு அம்ருதஹள்ளியில் காரில் கடத்திய ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்ருதஹள்ளி:
8 பேர் கைது
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்தனர். மேலும் அதில் சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் போதைப்பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மாபின், அபிஷேக், அக்ஷய் சிவன், அர்ஜூன், ஜோயல், பிரத்வின், மன்சூர் மற்றும் அகில் ஆகிய 8 பேர் என்பது தெரிந்தது. அவர்களில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் 4 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
ரூ.50 லட்சம் போதைப்பொருள்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்ததும், விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி சென்றபோது போலீசில் சிக்கியதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.