பெங்களூருவில் ரூ.6.30 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல்; வெளிநாட்டினர் உள்பட 8 பேர் கைது
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விற்பனை செய்ய முயன்ற ரூ.6.30 கோடிக்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்
பெங்களூருவில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக மது மற்றும் போதை விருந்துகள் இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடுவார்கள். இதையடுத்து, பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 பேர் கைது
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருட்கள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதை தடுக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஒரு மாதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப்பொருள் விற்பனையாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக எலெக்ட்ரானிக் சிட்டி, கொத்தனூர், பானசாவடி ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்க முயன்ற 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேர்
கைதானவர்களில் 2 பேர், ஆப்பிரிக்காவை சேர்ந்த அக்பு சிக் அந்தோனி, செபாஸ்டீன் ஆவார்கள். இதுதவிர ஆந்திரா, பெங்களூருவை சேர்ந்த ராமண்ணா, இர்பான், பாஷா, முகமது முஷாயித், இலியாஸ், முகமது சேக் ஆகிய 6 பேரும் சிக்கி உள்ளனர். கைதான 8 பேரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதபை்பொருட்களை அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக கோவா, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருட்களை பெங்களுருவுக்கு கடத்தி வந்துள்ளனர். கொத்தனூர், பானசாவடி, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ய 8 பேரும் தயாராகி இருந்தனர்.
ரூ.6.30 கோடி மதிப்பு
கைதான 8 பேரிடம் இருந்து 2 கிலோ 550 கிராம் எம்.டி.எம்.ஏ. 350 போதை மாத்திரைகள், 4 கிலோ ஆசிஷ் போதை ஆயில், 440 கிராம் சிரஸ், 7 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.6 கோடியே 30 லட்சம் ஆகும். கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
கைதான 8 பேரும் இந்த அளவுக்கு போதைப்பொருட்கள் வாங்க எங்கிருந்த பணம் கிடைத்தது, அவர்களுக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டுக்கு விற்பனைக்கு தயாராக இருந்த போதைப்பொருட்களை திறமையாக செயல்பட்டு பிடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தார்.