மழையால் இடிந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
மழையால் இடிந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பள்ளி;
வீடு இடிந்தது
தார்வார் தாலுகா மாதனபாவி கிராமத்தை சேர்ந்தவர் பீமப்பா பசப்பா பட்டேல் (வயது 74). விவசாயி. கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழைக்கு பீமப்பாவின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் தங்க இடம் இல்லாமல் தவித்து வந்த பீமப்பா, ஆன்லைன் மூலம் ராஜீவ் காந்தி கிராம வளர்ச்சி திட்டத்தில் ரூ.50 லட்சம் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அரசு அவருக்கு ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்க அனுமதி அளித்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர் உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார்.
தற்கொலை-போராட்டம்
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தார்வார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பீமப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் உடலை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த பீமப்பாவின் உடலை எடுத்து சென்று கிராம பஞ்சாயத்து அலுவகலம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயி பீமப்பாவிற்கு குறைவான நிவாரண தொகையை வழங்கிய அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.