மங்களூருவில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
மங்களூரு டவுனில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
மங்களூரு-
மங்களூரு டவுனில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழைக்கு முன் மழை பெய்ததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், கிராமம் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புத்தூர், சுள்ளியா, பெல்தங்கடி மற்றும் பண்ட்வால் போன்ற பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய மழை நன்றாக இருந்ததால், அங்கு குடிதண்ணீர் பிரச்சினை இல்லை. இருப்பினும், மங்களூரு கிராமப்புற மற்றும் டவுன் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குறைந்து அளவு தண்ணீரை வினியோகித்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரி தயானந்த நாயக் கூறுகையில், நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் மதிய உணவு, குடிநீர் மற்றும் கழிவறை தேவைகளுக்கு தண்ணீர் அவசியம். ஏற்கனவே தாலுகா வட்டார கல்வி அதிகாரிகளிடம் பேசி பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாதவாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய பஞ்சாயத்துகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஜூன் முதல் வாரத்தில் பருவமழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை
இதுகுறித்து கலெக்டர் ரவிக்குமார் கூறிதாவது:-
பி.யூ.கல்லூரிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்க உள்ளன. தனியார் பி.யூ. கல்லூரி, விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட உள்ளது. இதுகுறித்து பி.யூ.கல்லூரிகளின் இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.