கோடை மழையால் ரூ.40 கோடிக்கு சேதம் மந்திரி நாராயணகவுடா பேட்டி


கோடை மழையால் ரூ.40 கோடிக்கு சேதம்  மந்திரி நாராயணகவுடா பேட்டி
x

சிவமொக்காவில் கோடை மழையால் ரூ.40 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா;

மந்திரி நாராயணகவுடா ஆய்வு

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக சிவமொக்காவில் வெளுத்து வாங்கிய கனமழையால், ஏராளமான வீடுகள் இடிந்தன. மேலும் விளைநிலங்களும் நாசமாகின. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிவமொக்காவில் மழை பெய்யவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு சிவமொக்காவில் சூரியன் வெளியே வந்துள்ளது.

இந்த நிலையில் சிவமொக்காவில் மழை வெள்ள சேதங்களை நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரியும், விளையாட்டு துறை மந்திரியுமான நாராயணகவுடா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.40 கோடிக்கு சேதம்

சிவமொக்கா நகரில் கோர்ட்டு முன்பகுதி, பாபுஜிநகர், ஒலேஒன்னூர் சாலை, பி.பிரனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அந்தப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து மந்திரி நாராயணகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் கோடை மழையால் வீடுகள், பயிர்கள் என மொத்தம் ரூ.40 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரியுடன் கலந்து பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

சிவமொக்கா நகரில் 7 வார்டுகளில் மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் இந்த பகுதிகளில், மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள்

பின்னர் சிவமொக்கா நகரில் நடந்து வரும் 'ஸ்மார்ட்சிட்டி' திட்ட பணிகளை நாராயணகவுடா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகேவந்திரா, கலெக்டர் செல்வமணி, மேயர் அனிதா அண்ணப்பா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வைஷாலி, ஸ்மார்ட்சிட்டி திட்ட செயல் இயக்குனர் சிதானந்தா வட்டாரே ஆகியோர் இருந்தனர்.


Related Tags :
Next Story