அமலாக்கத்துறை சேதனை: நான் இறந்தாலும் சரணடைய மாட்டேன் - சஞ்சய் ராவத்
நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தனக்கும் எந்த ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் மராத்தியில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்"எனக்கும் எந்த ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை. சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டு இதைச் சொல்கிறேன். பாலாசாகேப் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்"
"தவறான நடவடிக்கை. பொய்யான ஆதாரம். நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். நான் இறந்தாலும் சரணடைய மாட்டேன். ஜெய் மராட்டியம்" வாழ்க சிவசேனா!!! தொடர்ந்து போராடுவேன்.. "என்று அவர் பதிவிட்டுள்ளார்.