ராகுல் காந்தி நாளையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இதுவரை 38 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
புதுடெல்லி,
ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை அண்மையில் விசாரித்தது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, அவரிடம் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் 13,14,15 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆஜராக விடுத்த சம்மன் அடிப்படையில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜர் ஆனார். ராகுல் காந்தியிடம் இன்று இரவு வரை விசாரணை நீடித்த நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இதுவரை 38 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.