முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு


முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு
x

வீரசாவர்க்கர் படம் விவகாரத்தில் சித்தராமையாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடகிற்கு வந்த அவரது கார் மீது பா.ஜனதாவினர் முட்டை வீசினர். இதையடுத்து பா.ஜனதாவினர், காங்கிரசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குடகு:

சித்தராமையா கருத்து

சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவையொட்டி பா.ஜனதாவினர் வீரசாவர்க்கரின் படம் பொறித்த பேனர்களை வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த பேனரில் இருந்த வீரசாவர்க்கரின் படத்தை கிழித்து ஒரு தரப்பினர் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உண்டாகும் அசாதாரண சூழல் நிலவியது. இதையடுத்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்தது தவறு என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், சித்தராமையா, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு இன்று பாதிப்பு பகுதிகளை பார்வையிட காரில் மைசூரு வழியாக சென்றார். அவருக்கு குஷால்நகரில் குடகு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வருகைக்கு எதிர்ப்பு

இதையடுத்து அவர் கோணிகொப்பா, முர்நாடு பகுதியில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு சித்தராமையா மடிகேரிக்கு சென்றார். அங்கிருந்து திதிமதி பகுதியில் மழை-வெள்ள பாதிப்புகளை பார்வையிட சித்தராமையா காரில் புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வீரசாவர்க்கர் படம் விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்தை கண்டித்தும் திதிமதியில் பா.ஜனதாவினர் ஏராளமானோர் சாலையின் இருபுறமும் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சித்தராமையா கார் அருகில் வந்ததும் போராட்டக்காரர்கள், 'கோ-பேக் சித்தராமையா'... 'கோ-பேக் சித்தராமையா' என்று ஆவேசமாக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முட்டை வீச்சு- தள்ளுமுள்ளு

இருப்பினும் சித்தராமையா அங்கிருந்து காரில் திதிமதி நகருக்குள் செல்ல முயன்றார். அப்போது சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டது. மேலும், வீரசாவர்க்கர் புகைப்படங்களையும் சித்தராமையாவின் காரில் போராட்டக்காரர்கள் வீசினார்கள். இந்த சம்பவங்களால் அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர், சித்தராமையாவை கலவரத்தை தூண்டி விடுபவர் என்றும், குடகில் கலவரத்தை தூண்டிவிட வந்திருப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பினர். பா.ஜனதாவினரின் செயலை கண்டித்து அந்தப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

காங்கிரஸ் கடும் கண்டனம்

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அய்யப்பா தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர். பின்னர் சித்தராமையா கார் அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் குடகில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சித்தராமையா சென்ற இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.

பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினரின் இந்த செயலுக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.


Next Story