காங்கிரசின் கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து காங்கிரஸ் எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு,:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பி தேர்தல் ஆணையத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கடந்த 8-ந் தேதி ஒரு கடிதம் எழுதினார்.
அதில், தென் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்துவதாகவும், அதையும் எந்த மறுஆய்வு செய்யாமல் பயன்படுத்துவதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
அனுப்பவில்லை
தென் ஆப்பிரிக்காவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பவும் இல்லை, அந்த எந்திரங்களை அந்த நாடு பயன்படுத்தவும் இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்த விஷயத்தில் ஒவ்வொரு நிலையிலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் உடன் இருந்துள்ளனர். இதுபோன்ற தவறான தகவல்கள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து நீங்கள் பகிரங்கமாக கூற வேண்டும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கை குறித்து வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த ஆணையம் கூறியுள்ளது.