முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தேர்தல் மாயாஜாலம்
ஐபோன் தொழிற்சாலை விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு தேர்தல் மாயாஜாலத்தில் ஈடுபட்டுள்ளதாக குமாரசாமி விமர்சித்துள்ளார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அக்கறை இல்லை
தென்கொாியாவை சேர்ந்த ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகத்தில் தனது நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும், அதனால் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். ஆனால் அந்த நிறுவனம், கர்நாடகத்தில் ஐபோன் தொழிற்சாலையை தொடங்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த அரசுக்கு விளம்பரம் மட்டுமே முக்கியம். ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. விளம்பரங்கள் மூலம் மக்களின் ஆதரவை தேடுவதில் தான் இந்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. உண்மைக்கு மாறான தகவலை வெளியிடுவது பசவராஜ் பொம்மையின் தேர்தல் பிரசார மாயாஜாலம். மக்களின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. இந்த பாக்ஸ்கான் நிறுவன விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மக்களுக்கு கூற வேண்டும்.
பிரசாரமே முக்கியம்
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது முக்கியம். அதனால் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்நாடக அரசின் தவறால் தான் ஓலா நிறுவனத்தின் ரூ.7,600 கோடி முதலீடு தமிழ்நாட்டிற்கு சென்றது. தேர்தல் பிரசாரத்தை விட மக்களின் நலனே முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு மக்களின் நலனை காட்டிலும் தேர்தல் பிரசாரமே முக்கியம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.