முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை


முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை
x

முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை பெங்களூரு புறநகரில் பரபரப்பு

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படுவதாக கடந்த 29-ந்தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வகிறார்கள்.

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததும் தனது அரசு கார்களை திரும்ப ஒப்படைத்தார். தற்போது அவர் தனக்கு சொந்தமான காரை பயன்படுத்தி வருகிறார். இந்தநிலையில் அவர் நேற்று பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளாபுரா அருகே உள்ள காட்டி சுப்பிரமணியா கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது தொட்டப்பள்ளாபுரா அருகே ஒசஹூத்யா என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் அவரது காரை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதாண்டி தலைமையிலான போலீசார், தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர். காரின் பின்பக்கம், முன்பக்கம் என துருவி, துருவி சோதனையிட்டனர்.

ஆனால் சோதனையில் பணமோ, பரிசுப்பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story