ஒலி பெருக்கி மூலமாக கிராம மக்களுக்கு மின்வாரிய ஊழியர்கள் வேண்டுகோள்
கொப்பல் மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தும்படி வாகனத்தில் சென்று ஒலி பெருக்கி மூலமாக மின்வாரிய ஊழியர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பெங்களூரு:-
200 யூனிட் இலவச மின்சாரம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதால் கிராமப்புறங்களில் மின் கட்டணம் செலுத்த மக்கள் மறுத்து வருகிறார்கள். குறிப்பாக பல மாதங்களாக பாக்கி வைத்திருக்கும் மின் கட்டணத்தை செலுத்தும்படி கேட்டு கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வது, அடித்து, உதைத்து தாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
கொப்பல் மாவட்டத்தில் மின் ஊழியரை ஒருவர் செருப்பால் தாக்குவது, கன்னத்தில் அறைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே கொப்பல் மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு சென்று மின் கட்டணம் செலுத்தும்படி கோரி மின்வாரிய ஊழியர்கள் வேண்டுகோள் விடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
ஒலி பெருக்கி மூலமாக வேண்டுகோள்
கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்வாரிய ஊழியர்கள், வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலமாக மின் கட்டணம் செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வாகனத்தில் செல்லும் ஊழியர்கள், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அரசு இன்னும் அமல்படுத்தவில்லை, அமல்படுத்திய பின்பு தான் இலவச மின்சாரம் கிடைக்கும், அதுவரை நீங்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் வருகிற நாட்களில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. இதற்கு முன்பு பாக்கி வைத்துள்ள மின் கட்டணத்தை நீங்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஒலி பெருக்கி மூலமாக மின்வாரிய ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
மக்களிடையே விழிப்புணர்வு
ஏனெனில் ஏற்கனவே கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ரூ.48 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்கள். தற்போது மக்களும் மின் கட்டணம் செலுத்த மறுத்து வருவதால் செஸ்காம் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டமும், நிர்வாகம் செய்ய முடியாத நிலையும் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொப்பல் மாவட்டம் செஸ்காம் என்ஜினீயர் ராஜேஸ் கூறுகையில், இலவச மின்சாரத்திட்டம் அமலுக்கு வருவதால், பாக்கி தொகையை வசூல் செய்வதற்காகத்தான், கிராமப்புறங்களில் மின்வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தும்படி ஒலி பெருக்கி மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.