கர்நாடகத்தில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு


கர்நாடகத்தில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
x

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கர்நாடகத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவை தவிர்த்து 90 சதவீதம்...

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த மாநாடு மூலமாக மாநிலத்தில் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 784 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. அரசு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு முதலீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளிலேயே 90 சதவீத முதலீடுக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே 68 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் ரூ.1.57 லட்சம் மதிப்பிலான 2 திட்டங்கள் மாநாட்டிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் பேருக்கு வேலை

முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், திட்டங்களை எக்காரணத்தை கொண்டும் காலதாமதம் ஆகாமல், சரியான நேரத்தில் அனுமதி வழங்கி செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதற்கு 90 நாட்களுக்குள் அனுமதி வழங்கவும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தவிர்த்து மைசூரு, தார்வார், பெலகாவி உள்ளிட்ட 2-வது மற்றும் 3-வது நகரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலம் அந்த நகரங்களின் வளர்ச்சி அடைவதுடன், வேலை வாய்ப்புக்கும் உதவியாக இருக்கும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிடைத்த முதலீடுகள் மூலமாக கர்நாடகத்தில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.


Next Story