ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு, ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. உத்தரவு
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
கோலார் தங்கவயல்;
கோலார் தங்கவயலில் இருந்து பேத்தமங்களா, ஆந்திரா வழியாக தமிழகத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.வுக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. பழைய மெட்ராஸ் சாலையில் ஆய்வு செய்தார்.
அப்போது சிலர் சாலையை ஆக்கிரமித்தது தெரியவந்தது. இதையடுத்து ெபாதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தும் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுகே இடமில்லை. அதிகாரிகள் உடனடியாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும். அந்த நிலங்களை மீட்டு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டால் 12 மீட்டர் அளவுக்கு சாலையை விரிவுபடுத்தலாம்.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். மேலும் சாலை விரிவாக்க பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். ஒரு நகரம் வளர்ச்சி அடைய போக்குவரத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.