டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்; மகள் ஐஸ்வர்யாவுக்கு, சி.பி.ஐ. சம்மன்


டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்; மகள் ஐஸ்வர்யாவுக்கு, சி.பி.ஐ. சம்மன்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:46 PM GMT)

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிற 22-ந் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருக்கிறது.

பெங்களூரு:

வருமான வரி சோதனை

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.8 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. சில மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் பெங்களூருவில் ஐஸ்வர்யா நடத்தும் தனியார் பள்ளியில் திடீரென சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிற 22-ந் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. அதே போல் அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

கல்வி கட்டணம்

இதுகுறித்து டி.கே. சிவக்குமார் சிவமொக்கா மாவட் டம் பத்ராவதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அமலாக்கத்துறையினர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிற 22-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். எனக்கு தினமும் நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கின்றன. இதை என்னவென்று சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

அதேபோல் சி.பி.ஐ. அதிகாரிகள் எனது மகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கல்வி கட்டணம், தேர்ச்சி தொடர்பாக விசாரிக்க நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். கல்வி கட்டணம் குறித்து விசாரிக்கிறார்கள். யோசித்து பாருங்கள், அவர்கள் என்ன கேட்கிறார்கள். இதை கடவுளுக்கு விட்டு விடுகிறேன். மத்திய விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து செயல்படுகின்றன. ஆளும் பா.ஜனதா தலைவர்கள் யாரையும் அவர்கள் விசாரிப்பது இல்லை' என்றார்.


Next Story