தேவாலயத்திற்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்; 2 பேர் கைது
உப்பினங்கடியில் தேவாலயத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு;
தாக்குதல்
தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா உப்பினங்கடி போலீஸ் எல்லைக்கு நெல்லியாடி பகுதியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கடந்த 27-ந் தேதி இந்த தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. அப்போது 2 பேர் திடீரென்று தேவாலயத்திற்குள் நுழைந்தனர். இதைப்பார்த்த பரிமனா என்ற கன்னியாஸ்திரி, 'அவர்களிடம் யார், உங்களுக்கு என்னவேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு அந்த நபர்கள் 2 பேரும் பேச்சு கொடுக்காமல் பரிமனாவை கீழே தள்ளிவிட்டனர். இந்த சத்தம் கேட்டு தேவாலய நிர்வாக குழுவை சேர்ந்த சோனு ஜார்ஜ் என்பவர் ஓடி வந்து 2 பேரையும் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த நபர்கள் சோனுஜார்ஜையும் தாக்கினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்து பரிமனா உப்பினங்கடி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தகராறில் ஈடுபட்ட 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த சதாம், இஸ்மாயில் என்று தெரியவந்தது. தேவாலயத்தில் நடந்த திருப்பணியை தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் உப்பினங்கடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.